Img டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களில் சுருண்டது Durban Test Cricket India first innings 334 runs
டர்பன், டிச. 27-
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் சீக்கிரமே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். முரளிவிஜய் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேகமூட்டம் இருந்ததால் போதிய வெளிச்சமும் இல்லை. ஆனால் ஏராளமான ரசிகர்கள் குடை பிடித்தபடி போட்டியைக் காண காத்திருந்தனர்.
வானிலை சீராக இல்லாததால் முன்கூட்டியே அதாவது உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை சற்று குறைய ஆரம்பித்து வெளிச்சம் வரத் தொடங்கியது. எனவே, உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி தொடங்கியது. இன்று குறைந்தது 75 ஓவர்கள் பந்து வீசுவதற்காக ஆட்ட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முரளி விஜயும், புஜாராவும் களமிறங்கினர். இந்த விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றும் முயற்சியில் மோர்கல், ஸ்டெயின் இருவரும் ஆக்ரோஷமாக பந்து வீசினர். விக்கெட்டுகளை காப்பாற்ற இருவரும் நிதானமாக ஆடினர். ஆனால், அணியின் ஸ்கோர் 198 ஆக இருந்தபோது, புஜாரா விக்கெட்டை இழந்தார். அவர் 132 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த முரளி விஜய், 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஸ்டெயின் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் சேர்த்த கோலியை மோர்கல் வெளியேற்றினார். டோனி 24 ரன்களில் விக்கெட்டை இழந்ததையடுத்து மற்ற விக்கெட்டுகளும் விறுவிறுவென சரிந்தன.
இதனால் இந்திய அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரகானே 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் 30 ஓவர்கள் வீசிய ஸ்டெயின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோர்கல் 3 விக்கெட்டுகளும், டுமினி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
...
No comments:
Post a Comment